Wednesday, September 30, 2026 4:08 pm
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி கலவரம் வெடித்தது. ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்தபடி பொலிஸ் வாகனத்தின் மீது ஏறி நின்றுகொண்டு போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் ராஜாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உலுக்கியது. பொதுமக்கள் ,மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கடும் கண்டனத்திற்கு உள்ளான இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், பின்னர் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திலும் மிக முக்கிய ஆதாரங்களாக மாறின.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை பொலிஸ் ராஜா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். உயிரிழந்த ராஜாவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

