Monday, November 16, 2026 4:17 pm
2031 ,2035 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண போட்டிகளை நடத்துவதற்கான கூட்டு விண்ணப்பங்கள், போட்டியை நடத்துவதற்குத் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளன. இவை குறித்து இந்த மாத இறுதியில் ஃபீஃபா உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிக்காக அமெரிக்கா, மெக்சிகோ, கோஸ்டாரிகா , ஜமேக்கா ஆகிய நாடுகள் இணைந்து விண்ணப்பித்துள்ளன. அந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48-ஆக அதிகரிக்கப்படவுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்கான போட்டியை நடத்த இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் , வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து விண்ணப்பித்துள்ளன.
நவம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஃபீஃபா சிறப்பு மாநாட்டில் (Extraordinary FIFA Congress) வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு விண்ணப்பங்களும் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட ஃபீஃபா மதிப்பீட்டு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா ஏற்கனவே மெக்சிகோ மற்றும் கனடாவுடன் இணைந்து ஆண்கள் உலகக் கிண்னப் போட்டியை நடத்திய அனுபவம் கொண்டிருப்பதாலும், 2025-ல் கிளப் உலகக் கிண்ணத்தை நடத்தவிருப்பதாலும், 2031-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2031 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண 4.5 மில்லியன் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2031-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தில், நான்கு நாடுகளிலுமாக மொத்தம் 20 மைதானங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவில் 14 மைதானங்களும், மெக்சிகோவில் 4 மைதானங்களும், ஜமைக்கா , கோஸ்டாரிகா ஆகிய நாடுகளில் தலா ஒரு மைதானமும் இடம்பெற்றுள்ளன. முன்மொழியப்பட்ட மைதானங்களில், வாஷிங்டன் டி.சி.-யில் அமையவுள்ள புதிய ‘ஆர்.எஃப்.கே’ (RFK) மைதானம் இன்னும் கட்டப்படவில்லை; மற்ற அனைத்து மைதானங்களும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவை.
இறுதிப் போட்டியை நடத்துவதற்காக நான்கு மைதானங்கள் பரிசீலனையில் உள்ளன: அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானம், டல்லாஸ் அருகே உள்ள ஏடி&டி (AT&T) மைதானம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சோஃபி (SoFi) மைதானம் மற்றும் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள மெட்லைஃப் (MetLife) மைதானம் ஆகியவை இதில் அடங்கும்.
அமெரிக்காவில் முன்மொழியப்பட்ட மைதானங்களில் ஏழு மைதானங்களும், மெக்சிகோவில் உள்ள ஒரு மைதானமும் செயற்கை புல்வெளிகளைக் கொண்டுள்ளன. போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக, இந்த மைதானங்களில் இயற்கையான புல்வெளிகளை அமைக்க வேண்டியிருக்கும். கடந்த கோடையில் நடைபெற்ற ஆண்கள் உலகக் கிண்ணத்தின் போது, சியாட்டிலில் உள்ள ‘லூமன் ஃபீல்ட்’ (Lumen Field) உள்ளிட்ட பல மைதானங்களில் தற்காலிக புல்வெளிகள் அமைக்கப்பட்டன.
2035-ஆம் ஆண்டிற்கான இந்த ஏல விண்ணப்பத்திற்கு, போட்டியை நடத்த முன்வந்துள்ள நாடுகள் “அனைவரும் ஒன்றிணைந்து” (All Together) என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளன.


