Thursday, October 1, 2026 4:39 pm
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வரவேற்றுள்ளது. இது ஒரு “வரலாற்று வெற்றி” என்றும், தமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஈராக் மக்கள் காட்டிய எதிர்ப்பு ,உறுதியின் விளைவு என்றும் அது வர்ணித்துள்ளது.
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக, பெருமைமிக்க ஈராக் மக்களுக்கும், ஒன்றுபட்ட இஸ்லாமிய எதிர்ப்பு முன்னணிக்கும், இஸ்லாமிய உலகின் புரட்சிகரப் போராளிகளுக்கும் ஐ.ஆர்.ஜி.சி தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது,” என்று அறிக்கையில் ஐ.ஆர்.ஜி.சி கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஈராக்கில் தனது இருபது ஆண்டு காலப் பணியை புதன்கிழமை அன்று முடித்துக்கொண்டதாக அறிவித்ததுடன் , அந்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவிற்கு எதிரான தனது 12 ஆண்டு கால ‘ஆபரேஷன் இன்ஹெரென்ட் ரிசால்வ்’ நடவடிக்கை “வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும்” அறிவித்தது.
2024-ல் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு அமெரிக்க , ஈராக் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில், இனிவரும் காலங்களில் தீவிரவாதக் குழுக்களின் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் ஈராக் பாதுகாப்புப் படைகள் தாங்களாகவே நிலைநிறுத்தும் திறன் கொண்டவை என இரு அரசாங்கங்களும் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தன.
இருப்பினும், ஐ.ஆர்.ஜி.சி இதனை ஈராக்கின் எதிர்ப்பின் விளைவாக சித்தரித்ததுடன், இரண்டு தசாப்த கால இராணுவத் தலையீட்டின் போது வாஷிங்டன் இப்பகுதி முழுவதும் பாதுகாப்பின்மை, பயங்கரவாதம் மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியது. ஈராக்கிலிருந்து படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து, இப்பகுதியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் அனைத்து ஈடுபாடுகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அது கூறியது.

