Thursday, May 14, 2026 2:21 pm
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 57வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
அங்கிரிஷ் ரகுவன்ஷி 46 பந்துகளில் 71 ஓட்டங்களையும், ரிங்கு சிங் ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 49 ஓட்டங்களையும், கமரன் கிறீன் 24 பந்துகளில் 32 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே 13 பந்துகளில் 19 ஓட்டங்களையும், பின் அலென் 08 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
193 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
விராட் கோலி இப் போட்டியில் குவித்த 9ஆவது ஐபிஎல் சதம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிபெறச் செய்தது என்றே சொல்ல வேண்டும். விராத் கோஹ்லி 60 பந்துகளில் 11 பவுண்டறிகள் 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 105 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். தேவ்டத் படிக்கல் 39 ஓட்டங்களை பெற்றார்.
நேற்றைய வெற்றியுடன் ஆர்சிபி அணியானது நடப்பு ஐ.பி.எல். புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.
இரண்டாவது ஓவரில் கோலி தனது ஆட்ட வேகத்தை அதிகரித்து வைபவ் அரோராவின் தளர்வான பந்துகளை பவுண்டரிகளாக சரமாரியாக விளாசினார். அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலும் அதிரடியாக ஆடினார் எனினும் அவர் கார்த்திக் தியாகியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 39 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க இந்த ஜோடி இணைந்து 92 ஓட்டங்களுடன் ஒரு முக்கியமான இணைப்பாட்டத்தை அமைத்தது.
கோலி வெறும் 32 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அணித் தலைவர் ரஜத் பாடிதார் 11 ஓட்டங்களுடனும் டிம் டேவிட் 2 ஓட்டங்களுடனும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்த ஆட்டமிழப்புகள் நிகழ்ந்த போதிலும் சேஸிங் முழுவதும் ஆர்சிபி அணியை கோலி தனது உறுதியான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 175 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு பிரமிக்க வைக்கும் சதத்தை அடித்து ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில் RCB வெற்றியை உறுதி செய்ய உதவினார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் விராட் கோலி தெரிவானார்.

Photo by Faheem Hussain / CREIMAS for IPL
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் நேற்றுதான் முதல் முறை மோதியது. ஆர்சிபி அணியில் ரொமாரியோ ஷெபர்ட் நீக்கப்பட்டு வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். நைட் ரைடர்ஸ் அணியில் காயமடைந்த தமிழ்நாடு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக சௌரப் துபே சேர்க்கப்பட்டார்.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இந்த இரு அணிகளுக்குமே முக்கியமாகக் காணப்பட்டது.
ஆர்சிபி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் கேகேஆர் 4 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்தது.
இந்தப் போட்டி முடிவுடன் ப்ளே ஓவ் வாய்ப்பை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சற்று அதிகரித்துக்கொண்டதுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வாய்ப்பு குறைந்துள்ளது.
விராட் கோலி இப் போட்டியில் குவித்த 9ஆவது ஐபிஎல் சதம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிபெறச் செய்தது அத்துடன் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு மைல்கல் சாதனைகளை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார்.
ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 சதங்களைக் குவித்த முதலாவது இந்தியர் என்ற சாதனையையும் விரைவாக 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிலைநாட்டினார்.
ரி20 போட்டிகளில் 409 இன்னிங்ஸ்களில் 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததன் மூலம் க்றிஸ் கெய்லின் சாதனையை விராட் கோலி முறிடியத்துள்ளார். கெய்லுக்கு இந்த சாதனையை நிலைநாட்ட 423 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.
ரி20 போட்டிகளில் 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஆறாவது வீரரான கோலி இந்தியர்களில் முதலாவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

