Tuesday, November 24, 2026 9:31 pm
பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் முஹம்மது ஜீஷான் அலி, நவம்பர் 25 ஆம் திகதி சீனாவின் ‘ஷென்சோ-24’ விண்கலத்தின் மூலம் தியன்கோங் (Tiangong) விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்ய உள்ளார். இதன் மூலம், மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளிப் பயணத்தில் பாகிஸ்தான் முதன்முறையாகப் பங்கெடுக்கிறது.
சீனாவின் மனித விண்வெளி ஆய்வு முகமை (CMSA), செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘ஷென்சோ-24’ விண்கலம் நவம்பர் 25 ஆம் திகதி பீஜிங் நேரப்படி காலை 8:18 மணிக்கு (பாகிஸ்தான் நேரப்படி காலை 5:18 மணிக்கு) வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்தது.
இந்த விண்வெளிப் பயணத்தில், சீன விண்வெளி வீரர்களான டாங் ஹாங்போ (Tang Honக்பொ), வு யி (Wu Yi) ஆகியோருடன், ‘பேலோட் ஸ்பெஷலிஸ்ட்’ (payload specialist – விண்கலப் பணி நிபுணர்) என்ற பொறுப்பில் ஜீஷான் அலி இணைய உள்ளார். இதன் மூலம், சீனாவின் தியன்கோங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரராகவும், விண்வெளிக்குச் செல்லும் முதல் பாகிஸ்தான் குடிமகனாகவும் அவர் திகழ்வார்.
இந்த விண்வெளிப் பயணத்திற்கு டாங் ஹாங்போ தலைமை தாங்க, வு யி விமானப் பொறியாளராக (flight engineer) பணியாற்றுவார். டாங் ஏற்கனவே ‘ஷென்சோ-12’ , ‘ஷென்சோ-17’ ஆகிய விண்வெளிப் பயணங்களில் பங்கேற்றுள்ளார்; இப்போது அவர் தியன்கோங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று முறை சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற உள்ளார். சீனாவின் மூன்றாவது தொகுதி விண்வெளி வீரர்களில் ஒருவரான வு யி, இந்த பயணத்தின் மூலம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பேலோட் நிபுணர், விண்வெளி ஆராய்ச்சியில் பாகிஸ்தான்-சீனா ஒத்துழைப்பின் கீழ் முதன்மையாக அறிவியல் சோதனைகளை நடத்தும் ஒரு குறுகிய காலப் பணியை மேற்கொள்வார். வழங்கப்பட்ட தகவலின்படி, வழக்கமான குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது, சோதனை மாதிரிகள் மற்றும் ஆராய்ச்சி உபகரணங்களை நிறுவுவது, மற்றும் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் திட்டமிடப்பட்ட சோதனைகளை மேற்கொள்வது ஆகியவை அவரது பொறுப்புகளில் அடங்கும்.

