Tuesday, November 24, 2026 9:56 pm
நீரிழிவு ,இதய நோயாய் ஆகியவற்றுக்கான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக, 5.121 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இரண்டு மருந்து கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ‘பைஃபேசிக் ஐசோபேன் ஹியூமன் இன்சுலின்’ (Biphasic Isophane Human Insulin) ஊசி மருந்தின் 2.7 மில்லியன் குப்பிகளை (vials) வழங்குவதற்காக, இந்தியாவின் ‘எம்.ஜே. பயோபார்ம் பிரைவேட் லிமிடெட்’ (M.J. Biopharm Private Limited) நிறுவனத்திற்கு 4.293 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டி ஏல நடைமுறையின் கீழ் இரண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்திய நிறுவனம் மட்டுமே நிபந்தனைகளுக்கு முழுமையாகப் பொருந்தக்கூடிய ஏலதாரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ‘எனோக்ஸாபரின் சோடியம்’ (Enoxaparin Sodium) ஊசி மருந்தின் 920,000 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள் அல்லது குப்பிகளை வழங்குவதற்காக, சீனாவின் ‘ஷென்சென் டெக்டோ பார்மாசூட்டிகல் கோ. லிமிடெட்’ (Shenzhen Techdow Pharmaceutical Co. Ltd) நிறுவனத்திற்கு 828,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஏழு விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதில், நிபந்தனைகளுக்குப் பொருந்தக்கூடிய மிகக் குறைந்த விலையைக் கோரிய ஏலதாரராக இந்த சீன நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உயர்மட்ட நிரந்தர கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இரண்டு ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்பட்டன. ஒப்பந்த மதிப்புகளில் சரக்குக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் (cost and freight charges) உள்ளடங்கும்.

