Thursday, May 14, 2026 1:19 pm
இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் , வெளிநாட்டு அலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பின்னர் இலங்கையிலிருந்து பெலாரஸிற்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது உயர்மட்ட விஜயமாக இது அமைந்துள்ளதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதியதொரு மைல்கல்லாகவும் இது பார்க்கப்படுகிறது.
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது , அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாக்சிம் ரிஷென்கோவ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்தத் தூதுக்குழுவில் ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஷோபினி குணசேகர , ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து , இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் மேம்படுத்துவது தொடர்பான கூட்டு அறிக்கையினை இரு நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களும் வெளியிட்டனர்.
மேலும் , இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் வர்த்தகம் , கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

