Friday, October 2, 2026 10:43 pm
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 44.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிலம் , இரண்டு மாடி வீடு ஆகியவற்றை—முடக்குவதற்கு இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (02) முதல் 14 வேலை நாட்களுக்கு இச்சொத்து தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரணசிங்க ஆராச்சிகே சமன் குமார (இவர் ‘அடா’ என்றும் அழைக்கப்படுகிறார்) , அவரது மனைவி தோத்தவத்த படகே சங்கீதா பிரியதர்ஷினி ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
பஹல கடுனேரிய (Pahala Kaduneriya) பகுதியில் 24.80 பேர்ச் (perch) நிலம் சங்கீதா பிரியதர்ஷினியின் பெயரில் ரூ. 9.5 மில்லியனுக்கு வாங்கப்பட்டதும், பின்னர் அந்த இடத்தில் சுமார் ரூ. 35 மில்லியன் செலவில் இரண்டு மாடி வீடு கட்டப்பட்டதும் மேலதிக விசாரணையில் தெரியவந்தது.
எனவே, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்டது) பிரிவு 7(1)-இன் படி, சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான மேலதிக பரிவர்த்தனைகளை இன்று (02) முதல் 14 வேலை நாட்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

