Wednesday, September 30, 2026 8:41 pm
ஆப்பிரிக்க நாடான சோமாலியா அருகே கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் பணியில் இருந்த ஓர் இந்தியர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பாகிஸ்தானியர்கள் ஓர் இந்தியரும் காயமடைந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய கடற்படை அளித்துள்ள தகவலை மேற்கொள்காட்டி, தி டெய்லி சோமாலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பலாவு நாட்டின் கொடியுடன் இயக்கப்பட்ட எம்டி ஹானர் 25 என்ற எண்ணெய் கப்பல், சோமாலியத் தலைநகரான மொகடிஷுவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கடந்த ஏப்ரல் 21ம் திகதி கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
கப்பலில் 18,500 பீப்பாய் எரிபொருள் இருந்தது. கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில், 10 பேர் பாகிஸ்தானியர்கள், 4 பேர் இந்தோனேஷியர்கள், இருவர் இந்தியர், ஒருவர் மியான்மர் நாட்டவர்.
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை, சோமாலியாவின் புண்ட்லேண்ட் கடல்சார் காவல்படை வெற்றிகரமாக மீட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. எனினும், அதற்கு முன்பாகவே கடற்கொள்ளையர்கள் 5 பேரை கொன்றுள்ளனர். அவர்களில், மூன்று பேர் பாகிஸ்தானியர்கள், ஒருவர் இந்தியர், ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் எப்போது, எப்படி கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. கப்பல் இப்போது பாதுகாப்பாகவும், புண்ட்லேண்ட் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. 16 கடற்கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

