Sunday, November 15, 2026 8:12 am
கிழக்கு ஜெருசலேம் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் மீது பாலஸ்தீனிய மக்களுக்கு நிரந்தர இறையாண்மை உண்டு என்பதை உறுதிப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை 150 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் ஆதரித்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாவது குழு, நவம்பர் 11, ஆம் திகதிஇந்தத் தீர்மானத்தை அங்கீகரித்தது; இதற்கு 151 நாடுகள் ஆதரவாகவும்,அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, மைக்ரோனேசியா, நௌரு, பலாவ் , பரகுவே ஏழு நாடுகள் எதிராகவும் வாக்களித்தன, 11 நாடுகள் வாக்களிக்கவில்லை.
‘கிழக்கு ஜெருசலேம் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களின் நிரந்தர இறையாண்மை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலானில் உள்ள அரபு மக்களின் இயற்கை வளங்கள் மீதான இறையாண்மை’ என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம், ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் மக்கள் தங்கள் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அவற்றிலிருந்து பயனடைவதற்குமான உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தீர்மானம், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், பாலஸ்தீனிய இயற்கை வளங்களைச் சுரண்டுதல் அல்லது அழித்தல் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், அத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கான பாலஸ்தீனியர்களின் உரிமையையும் இது அங்கீகரிக்கிறது.
இந்தத் தீர்மானம் குழு நிலையில் அங்கீகரிக்கப்பட்டு, இறுதிப் பரிசீலனைக்காக முழு ஐ.நா. பொதுச் சபைக்கு அனுப்பப்படும்.இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியது அல்ல, ஆனால் பாலஸ்தீனிய உரிமைகள் மற்றும் இயற்கை வளங்கள் குறித்த ஐ.நா. உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இது அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

