Thursday, April 2, 2026 12:57 pm
அண்மைக்காலங்களில் நிலவு குறித்த ஆய்வுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் புறப்பட்டுள்ளனர்.
1972-க்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்படியாக நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச அளவில் கவனிக்கக் கூடிய மிக முக்கியமான விண்வெளி ஆய்வு திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
நமது பூமிக்கு ஒரே துணைக்கோளாக நிலா தான் உள்ளது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டு நிலவு குறித்த ஆய்வுகளைச் செய்தன. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல சாட்டிலைட்களையும் அனுப்பப்பட்டன. ஆனால் அதன் பிறகு இரு நாடுகளுமே நிலவு குறித்த ஆய்வுகளை விட்டுவிட்டன.
சமீப காலமாக மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீண்டும் நிலவுக்கு சாட்டிலைட்களை அனுப்பி ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன.
இந்தச் சூழலில் தான் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை எடுத்தது. இதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்று வியாழக்கிழமை நாசா மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
32 மாடிக் கட்டிடம் உயரமுள்ள ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் என்ற ராக்கெட் நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் இலங்கை நேரப்படி இன்று காலை 3.54 மணிக்கு ஏவப்பட்டது.
விண்வெளி பயணத்தில் சிறு வானிலை நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெறும் என்பதால் வானிலை மாற்றங்களையும் குழு கூர்ந்து கவனித்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டிமிஸ் 2 குழுவின் இந்த விண்வெளிப் பயணம் தொடங்கியுள்ளது.
நாசா விண்வெளி வீரர்களான ரீட் வெய்ஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச், மற்றும் கனடிய விண்வெளி முகாமைத்துவ விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இந்தப் பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 நிலவுப் பயணம் 2023-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இந்த விண்வெளி வீரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றுள்ளனர். இந்தப் பயணத்தை விக்டர் குளோவர் வழிநடத்துகின்றார். இதன் மூலம் நிலவைச் சுற்றி வரும் முதல் கறுப்பின விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். கிறிஸ்டினா கோச் புவியின் தாழ் சுற்றுப்பாதையைத் தாண்டிச் செல்லும் முதல் பெண்மணி ஆவார் மேலும் ஜெர்மி ஹேன்சன் முதல் அமெரிக்கர் அல்லாதவர் ஆவார்.
நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் இவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்கின்றது. பூமியைச் சுற்றி ஒரு நாள் பயணித்த பிறகு ஓரியன் விண்கலம் அவர்களைச் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும். அங்கு தேவையான ஆய்வுகளைச் செய்த பிறகு அந்த குழு மீண்டும் பூமிக்குத் திரும்பும்.
சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும். மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லவே ஆர்டெமிஸ் மிஷன் நடந்து வந்தாலும் இந்த குறிப்பிட்ட ஆர்டெமிஸ் 2ல் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இவர்கள் நிலவுக்கு மேல் சில ஆயிரம் கிமீ தொலைவில் அதைச் சுற்றி மட்டுமே வருவார்கள். ஆர்டெமிஸ் 4 மிஷனில் தான் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2028ல் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1972-ம் ஆண்டு நடைபெற்ற அப்பல்லோ திட்டத்திற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் மனிதர்கள் நிலவின் சுற்றுவட்டாரப் பகுதிக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நாசாவின் ‘ஆர்டெமிஸ் 2 விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இன்று நிலவை நோக்கிப் பயணிக்கின்றதனை கூறலாம்.

