Friday, August 14, 2026 3:53 pm
கிழக்கு ஜப்பானில் , முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெய்த கனமழையால் டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 7,000 பேர் சிக்கிக்கொண்டனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் அரசு கட்டிடங்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.
டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால், நிலச்சரிவு எச்சரிக்கைகளும் மின்சாரத் தடைகளும் ஏற்பட்டன. சிபா மற்றும் பிற பகுதிகளில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 115 மி.மீ மழை பெய்ததால், சுமார் 45,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது வழக்கமாக ஓகஸ்ட் மாதம் முழுவதும் பெய்யும் மழையின் அளவிற்கு ஏறக்குறைய சமமானதாகும்.
அந்த மாகாணத்திற்கு கனமழை மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பாக மிக உயர்ந்த நிலை 5 எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
டோக்கியோவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான நரிட்டாவில் சுமார் 7,000 பயணிகள் இரவு தங்கினர், அதே நேரத்தில் 1,700 பேர் சிபா மாகாண அரசாங்கக் கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
காலநிலை சீர்குலைவு, தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் அதிகரித்து வருவதாக ஜப்பானிய வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

