Sunday, August 23, 2026 2:45 pm
பாகிஸ்தானில் கூகுள் நிறுவனம் தனது முதல் அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூகுள் பிரதிநிதிகளுடன் சந்தித்து அலுவலகத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் டிஜிட்டல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கூகுளின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் அரசு மற்றும் பொதுக் கொள்கை விவகாரங்களுக்கான துணைத் தலைவர் வில்சன் வைட் தலைமையிலான குழுவினர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தனர். அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி நடாலி பேக்கரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் தற்போது மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்தை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதுடன், இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த முயற்சிகளில் கூகுள் முக்கிய பங்காற்றும் என ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நாட்டில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் உள்ளூர் கூட்டாளிகளுடன் இணைந்து கூகுள் உருவாக்கிய Chromebook அசெம்பிளி திட்டம் குறித்தும் வில்சன் வைட் விளக்கினார். பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் Chromebook-களை பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

