Friday, August 21, 2026 5:40 am
சர்ச்சைக்குரிய பிரதேசம் தொடர்பாக தீவிரமடைந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள, ஜப்பான் உரிமை கோரும் தீவுக் கூட்டத்திற்கு அருகே ஏவுகணை சோதனை நடத்தியதாக ரஷ்யாவின் பசிபிக் கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது.இந்த சோதனை எப்போது நடத்தப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முதன்முறையாக அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார். அதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கான ஜப்பானிய தூதர் அகிரா முட்டோவை ரஷ்ய வெளியுறவு அமைச்சுவரவழைத்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பானால் ‘வடக்குப் பிரதேசங்கள்’ என்றும், ரஷ்யாவால் ‘தெற்கு குரில்ஸ்’ என்றும் கூட்டாக அழைக்கப்படும் நான்கு தீவுகளில் மிகப்பெரியதான எட்டோரோஃபு தீவிற்கு புட்டின் ஆகஸ்ட் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டார்.
‘பாஸ்டியன்’ எனும் தரை-கப்பல் ஏவுகணை அமைப்பு பொருத்தப்பட்ட ஒரு பிரிவு இந்த சோதனையை நடத்தியதாக கடற்படைத் துறை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு எட்டோரோஃபுவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் கடற்படையின் முதன்மைக் கப்பலான வர்யாக் என்ற வழிகாட்டப்பட்ட ஏவுகணைக் கப்பலும், ஓம்ஸ்க் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் இந்த ஏவுகணை சோதனையில் பங்கேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையானது எதிரிக் கப்பல்கள் மீதான தாக்குதலை உருவகப்படுத்தியதுடன், குறைந்தது 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாகத் தாக்கியதாகவும் கடற்படை கூறியுள்ளது.
குனாஷிரி, ஷிகோடன் மற்றும் ஹபோமாய் சிறு தீவுக் குழுமத்தையும் உள்ளடக்கிய இந்தத் தீவுகள், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆகஸ்ட் 15, 1945 அன்று சரணடைந்த உடனேயே சோவியத் யூனியனால் சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டதாக ஜப்பான் கூறுகிறது. இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்றும், போரின் விளைவாகவே இந்தத் தீவுகள் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாக மாறியதாகவும் ரஷ்யா வாதிடுகிறது.
2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இது ஜப்பானையும் அதன் ஜி7 சக நாடுகளையும் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தூண்டியது.

