Friday, August 21, 2026 5:28 am
புது தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்திற்கு வெளியே நீண்ட நாட்களாக அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறப் பாதுகாப்பு தடைகளையும், போக்குவரத்துத் தடுப்புகளையும் இந்திய அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு தடைகளை அகற்றிய மூன்று நாட்களுக்கு பிறகு, பரஸ்பர நடவடிக்கையாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான உறவுகள் ஏற்கனவே பதற்றத்துடன் காணப்படும் நிலையில், இந்த சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதர் செர்ஜியோ கோர் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு, அந்த பகுதியை “இந்தியாவின் முக்கியமான பகுதி” என்று வர்ணித்தது பாகிஸ்தானை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்கத் தூதர் தெரிவித்த இந்த கருத்துகளுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பாளர் நடாலி பேக்கரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு நேரில் அழைத்துத் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்று வாதிட்டுள்ள பாகிஸ்தான், இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கிய மத்தியஸ்தம் குறித்த வாக்குறுதியையும் நினைவூட்டியுள்ளது.
ராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்களும், அமெரிக்கத் தூதரின் காஷ்மீர் குறித்த கருத்துகளும் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் சூழலை மேலும் சூடாக்கியுள்ளன.

