Friday, August 21, 2026 5:33 am
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் பல்டி அடித்துள்ளதாக திமுக ,அதிமுகவின் ஐடி விங்ஸ் ஆகியன கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
முன்னதாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த அவர், தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில், மறுவரையறையால் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதே இந்த திடீர் விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ‘எட்டப்பர்கள்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டது இவரைத்தானா என்றும், தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கூட்டணியில் உள்ள கட்சிகள் தட்டிக் கேட்குமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
இதேபோல், அதிமுக ஐடி விங்கும் தனது பதிவில், திரைப்படங்களில் பல்டி அடிப்பதில் கைதேர்ந்த விஜய், தற்போது இந்த விவகாரத்திலும் மிகப்பெரிய அந்தர் பல்டி அடித்துள்ளதாக கிண்டல் செய்துள்ளது. மத்திய அரசும் முன்பு இதே நிலைப்பாட்டைத்தான் கூறியது என்றும், அதிமுக இதனால்தான் அப்போதே இதை ஆதரித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தற்போது கூட்டத்தில் வேறுவிதமாக பேசியுள்ள முதல்வரின் இந்த நிலைப்பாடு மாற்றம், தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்குத் தவெக தரப்பு என்ன பதிலளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

