Saturday, August 8, 2026 12:51 pm
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் பல நாடுகள் தமது அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமித்தன. ஐவரி கோஸ்ட்,துருக்கி செக்கியா ஆகிய நாடுகள் புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளன.
ஐவரி கோஸ்ட் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரான்சின் ஹெர்வ் ரெனார்டை மீண்டும் நியமித்துள்ளதாக ஐவோரியன் உதைப்ந்தாட்டக் கூட்டமைப்பு செவ்வாயன்று அறிவித்தது. இது ‘யானைகள்’ அணியின் பொறுப்பில் அவரது இரண்டாவது காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கிண்ணத்தை ஐவரி கோஸ்ட்டுக்குப் பெற்றுக்கொடுத்தவர். 11 வருடங்களின் பினனர் மீண்டும் ஐவரி கோஸ்ட்டுடன் இணைகிறார். காத்திருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
57 வயதான இவர், எமர்ஸ் ஃபே-க்குப் பதிலாகப் பொறுப்பேற்கிறார். ஃபே-யின் ஒப்பந்தம் ஜூலை 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 2023 ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டியில், சொந்த மண்ணில் ‘யானைகள்’ அணிக்கு ஒரு வியத்தகு வெற்றியைப் பெற்றுத் தந்தபோதிலும், அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில், ஐவரி கோஸ்ட் அணி முதல் முறையாக நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
அண்மையில் நடந்த உலகக் கிண்ணப்போட்டியில் துனிசியா அணியின் பொறுப்பாளராக ரெனால்ட் இருந்தார் . அங்கு அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே அணியை வழிநடத்தி, இரண்டிலும் தோல்வியடைந்ததோடு, ஏழு கோல்களை விட்டுக்கொடுத்தார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது, அவரது அப்போதைய அணியான சவூதி அரேபியா, இறுதியில் உலக சம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜென்ரீனாவை தோல்வியடையச் செய்ததால் அவர் செய்திகளில் இடம்பிடித்தார்.
ரெனார்ட், ஆப்பிரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற சர்வதேசப் பயிற்சியாளர்களில் ஒருவர். அவர் 2012ல் ஸாம்பியாவை ஒரு எதிர்பாராத ஆப்பிரிக்க கோப்பை பட்டத்திற்கு வழிநடத்தியுள்ளார். மேலும், உலகக் கிண்ணப் போட்டிகளில் மொராக்கோ ,சவூதி அரேபியா ஆகிய அணிகளுக்கும் பயிற்சியளித்துள்ளார். மிக சமீபத்தில், அவர் பிரான்ஸ் மகளிர் தேசிய அணியை நிர்வகித்தார்.
துருக்கியின் பயிற்சியாளரானார் உதைபந்தாட்ட நடுவர்
துருக்கி உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உலகக் கிண்ணப் போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய அந்தோனி டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக டிரினிட்டி சேம்பர்ஸ் சட்ட நிறுவனம் உறுதிப்படுத்தியது;
உலகக் கிண்ணப் போட்டியின் பின்னர் உதைப்ந்தாட்ட நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அந்தோனி டெய்லர் அறிவித்துள்ளார். அவரது கடைசிப் போட்டி, காலிறுதிக்கு முந்தைய .ஸ்பெயின் ,போத்துகல் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியாகும். அப்போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று, பின்னர் பட்டத்தையும் வென்றது.
47 வயதான அந்தோனி டெய்லரின், 20 ஆண்டுகாலப் பணி வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் பணியில் அவர் 668 தொழில்முறை உள்நாட்டுப் போட்டிகளுக்கும், யூரோ 2020 போட்டிக்கும், இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
செக் குடியரசின் பயிற்சியாளராக சாண்டி டெனியா நியமனம்
உலகக் கிண்ணப் போட்டியில் பயிற்சியாளர் மிரோஸ்லாவ் கூபெக்கின் கீழ், மூன்று போட்டிகளில் விளையாடிய செக் குடியரசு ஒரு புள்ளியை மட்டுமே பெற்று, தனது குழுவில் கடைசி இடத்தைப் பிடித்து குழுநிலை போட்டியிலேயே வெளியேறியது.
தென் கொரியா, மெக்சிகோ ஆகியவற்றிடம் தோல்வியடைந்து தென்னாப்பிரிக்காவுடன் சமன் செய்த மோசமான முடிவுகளுக்குத் தனது பொறுப்பை கூபெக் ஒப்புக்கொண்டார். ஒரு புள்ளியுடன் ‘ஏ’ பிரிவில் செக் அணி கடைசி இடத்தைப் பிடித்தது.
மொரோஸ்லாவ் கூபெக்குக்குப் பதிலாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாண்டி டெனியாவை செக்கியா நியமித்துள்ளது. செக் குடியரசு தேசிய அணியின் பொறுப்பை ஏற்று , அப்பதவியை வகிக்கும் முதல் வெளிநாட்டவர் ஆனார். சாண்டி அவர் 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயினுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். ஸ்பெயினின் 17 வயதுக்குட்பட்ட (2017) , 19 வயதுக்குட்பட்ட (2019) அணிகளுடன் ஐரோப்பிய பட்டங்களையும் வென்றார்.
52 வயதான அவர், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கக்கூடிய வாய்ப்புடன் கூடிய இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செக் உதைபந்தாட்டச் சங்கம் தெரிவித்துள்ளது. செக்கிய உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவர் டேவிட் ட்ருண்டா, பிராகில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் டெனியாவை அறிமுகம் செய்தார்.



