Wednesday, September 23, 2026 1:57 pm
2019 ஆம் ஆண்டு உதிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்ட 15 பேரை பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து , அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 220 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில்,முதலாம் எதிரியான நவுஃபர் மௌலவிக்கு நீதிமன்றம் 16900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை [23]இரவு 11:30 மணியளவில், நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான நீதிபதிகள் சுஜீவ நிஸ்சங்க , ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய விசேட அமர்வு இத்தீர்ப்பை அறிவித்தது.
267 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தலா 20 ஆண்டுகள் வீதம் 5,340 ஆண்டுகளும், 574 பேரைக் காயப்படுத்திய குற்றத்திற்காக 1,480 ஆண்டுகளும் உட்பட ஏனைய குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 16,900 ஆண்டுகள் தண்டனை கணக்கிடப்பட்டுள்ளது.
ஏனைய குற்றவாளிகளான கஃபூர் மாமா (240 ஆண்டுகள்), மில்ஹான் (241 ஆண்டுகள்), அப்துல் ஹக் (241 ஆண்டுகள்), மனேஃப் (260 ஆண்டுகள்), சஜித் மௌலவி (220 ஆண்டுகள்), ஷாஃபி மௌலவி (220 ஆண்டுகள்) உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், குற்றவாளிகள் எதிரிக் கூண்டில் நின்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளின்படி அதிகாரிகளிடம் மன்னிப்போ அல்லது தண்டனையைக் குறைக்கக் கோரும் கோரிக்கைகளையோ முன்வைக்க மாட்டேன்” என நபுஃபர் மௌலவி தெரிவித்தார்.
ஈஸ்டர் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆடம்பர தங்கும் விடுதிகளையும் ,தேவாலயங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 267 பேர் உயிரிழந்தனர் , கிட்டத்தட்ட 6000 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகள், இலங்கையின் வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுவதோடு, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
2021-ஆம் ஆண்டில், தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவோ அல்லது தூண்டியதாகவோ குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்கள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஏனைய, ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டனர். மற்றுமொருவர், அவரது வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்.

