Monday, May 11, 2026 2:52 pm
ஐபிஎல் 2026 சீசனின் 54வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
திலக் வர்மா அரைசதம் அடித்தார். ஆர்சிபி பௌலர்களில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
166 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசிப் பந்தில் தனது இலக்கை எட்டியது. குருனால் பாண்டியா 46 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பெரும் சவாலாக புவனேஷ்வர் குமார் விளங்கினார். புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது மும்பை இந்தியன்ஸ்.
முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரியான் ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். முதல் ஓவரில் விக்கெட் வீழ்ந்திருந்தாலும் ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் 1 பவுண்டரியும் 2 சிக்ஸர்களும் என அதிரடி காட்டினார் ரோஹித் ஷர்மா.
ஆட்டத்தின் 3வது ஓவரில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் என இரண்டு பெரிய பேட்டர்களை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி மும்பை இந்தியன்ஸ்க்கு பேரிடிளை கொடுத்தார் புவனேஸ்குமார்.
28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் தடுமாறியது மும்பை இந்தியன்ஸ். நமன் தீர் – திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி மும்பையை சரிவிலிருந்து சற்றே மீட்கத் தொடங்கினார். இந்த ஜோடி 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடிய திலக் வர்மா இந்த சீசனில் தன்னுடைய 2வது 50இற்கு மேற்பட்ட ஸ்கோரை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டியின் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது எனலாம்.
தீபக் சஹர் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் விராட் கோலி. தான் சந்தித்த முதல் பந்திலேயே மிட் ஆஃப் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. அடுத்த ஓவரில் தேவ்தத் படிக்கல் விக்கெட்டையும் கைப்பற்றினார் சஹர்.
8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கார்பின் பாஷ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளால் தடுமாறிய ஆர்சிபி பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது.
ஜேக்கப் பெதெல் குருனால் பாண்டியா ஆகிய இருவரின் ஜோடியும் சிறந்த பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். இந்த ஜோடி 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தது. 131இற்கு 6 விக்கெட் என்ற நிலைக்கு ஆர்சிபி சென்றதனால் ஆட்டம் சூடுபிடித்தது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருக்க குருனால் பாண்டியா நிலைத்து நின்று விளையாடியது ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. 32 பந்துகளில் குருனால் பாண்டியா தனது அரைசதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அவருக்கு கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். இதனால் அவரால் ஓட முடியவில்லை.
அல்லா கசன்ஃபர் வீசிய இரண்டாவது பந்தை குருனால் பாண்டியா தூக்கி அடிக்க அதை பவுண்டரி எல்லையில் பிடித்து திலக் வர்மாவிடம் வீசினார் நமன் தீர். நமன் தீர் வீசிய பந்தை பிடிக்காமல் விட்டார் திலக். இதனால் ஒரு கேட்ச் வாய்ப்பு கைநழுவியது. 46 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் எடுத்தார் குருனால் பாண்டியா.
கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆர்சிபி வெற்றிக்கு 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கினார் புவனேஷ்வர் குமார்.
கடைசிப் பந்தை நேராக பௌலரின் கைக்கு ராஷிக் தார் அடித்தும் பவா அந்தப் பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதன்மூலம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசிப்பந்தில் அபார வெற்றியைப் பெற்றது ஆர்சிபி.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 6புள்ளிகள் மட்டுமே பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தன.

