Tuesday, April 14, 2026 12:36 pm
எதிர்பாராததை எதிர்பாதிருங்கள் என்பது போல நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இடம்பெறுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சாகிப் ஹுசைன் மற்றும் பிரபுல் ஹிங்கே ஆகியோரின் பந்துவீச்சால் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.
217 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு சன்ரைசர்ஸின் அறிமுகப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர் என்றே சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்று படு தோல்வியடைந்தது.
ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பிரபுல் ஹிங்கே பெற்று சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த இருபதுக்கு 20 போட்டிகளில் இந்த சாதனை இதுவரை 19 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.
தன்னுடைய அறிமுகப் போட்டியின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராக பிரபுல் ஹிங்கே இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமன்றி இன்னிங்ஸின் முதல் 3 ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக பிரபுல் ஹிங்கே சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2011 ஆம் ஆண்டில் இஷாந்த் சர்மா 3.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
சாகிப் ஹுசைன் 24 பந்தில் 4 விக்கெட்கள் மற்றும் பிரபுல் ஹிங்கே 34 பந்தில் 4 விக்கெட்டுக்கள் என இருவரும் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஒரே இன்னிங்ஸில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஐபிஎல் வரலாற்றில் இது 4 ஆவது முறையாகும்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முதல் 4 துடுப்பாட்ட வீரர்கள் இணைந்து வெறும் 1 ஓட்டத்தை மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 வீரர்கள் எடுத்த மிகக்குறைந்த ஓட்டம் இதுவேயாகும்.
ஜெய்ஸ்வால் 1 ஓட்டம் எடுக்க வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் ஓட்டம் எதனையும் பெறாமலே ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் அணி தனது முதல் 5 விக்கெட்டுகளை வெறும் 18 பந்துகளில் இழந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்த நிகழ்வாக பதிவாகியுள்ளது. முதல் 4 விக்கெட்டுகளை வெறும் 10 பந்துகளில் இழந்தமை ராஜஸ்தான் அணியின் ஒரு மோசமான சாதனையாகப் பதிவானது.
ராஜஸ்தான் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். ஐபிஎல் வரலாற்றில் இது 7 ஆவது முறையாகும். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாகப் பந்துவீச்சாளர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
நேற்றைய போட்டிக்கு முன்னர் பெரிதும் பேசப்பட்ட விடயமாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என பல முன்னணி அணிகளின் பந்துவீச்சைப் பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதுதான்.
இந்த சீசனில் மிகவும் பலவீனமான பந்துவீச்சைக் கொண்ட அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் இருந்து அந்த எண்ணத்தை பந்தாடியது என்றே சொல்ல வேண்டும்.
முதல் முறையாக ஐபிஎல் அரங்கில் ஆடும் இரு சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ராயல்ஸ் பேட்டர்களை நிலைகுலையச் செய்தார்கள்.
பெரிய பெரிய அணிகளுக்கு எதிராகவெல்லாம் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டிக்கொண்டிருந்த சூர்யவன்ஷியை ஒரே பந்தில் வெளியேற்றினார் பிரஃபுல் ஹிங்கே. தன் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார் பிரஃபுல் ஹிங்கே.
19 வருட ஐபிஎல் வரலாற்றில் நேற்று வரை எந்தவொரு பௌலருமே ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதில்லை. மிகப் பெரிய பௌலர்கள் கூட இதைச் செய்ததில்லை. ஆனால் தன் அறிமுக போட்டியில் விளையாடிய பிரஃபுல் ஹிங்கே அந்த சாதனையை அரங்கேற்றினார்.
24 வயதான பிரஃபுல் ஹிங்கே நாக்பூரில் பிறந்தவர். 13 வயதில் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு விதர்பா அணிக்காக அவர் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகம் ஆனார். இந்த ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக அவர் ஒரேயொரு அதிகாரப்பூர்வ டி20 போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் நான்காவது சிறந்த அறிமுக பந்துவீச்சைப் பதிவு செய்தார் சாகிப் ஹுசைன். தான் வீசிய நான்காவது பந்திலேயே யஷஷ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார். தன் முதல் போட்டியாக இருந்தாலும் தேர்ந்த பௌலரைப் போல் வேரியேஷன்கள் காட்டினார் சாகிப்.
24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார் சாகிப். பிஹாரைச் சேர்ந்த சாகிப் ஹுசைனுக்கு தற்போது 21 வயது. 2022-ஆம் ஆண்டு பிஹார் அணிக்காக சையது முஸ்தாக் அலி தொடரில் அறிமுகமான சாகிப் 2024 சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2026 சீசனுக்கான ஏலத்தில் அவரை அடிப்படை விலையான 30 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
இந்த ஆட்டம் இளமைக்கும் அனுபவத்திற்கும் இடையிலான பெரும் போராக அமைந்தது. இறுதியில் அறிமுக வீரர்களின் வேகத்தில் புதிய சரித்திரம் படைக்கப்பட்டது.

