Monday, November 23, 2026 7:51 pm
2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய மத்திய ஒப்பந்தப் பட்டியலை பாகிஸ்தான் கிறிக்கெற் சபைவெளியிட்டுள்ளது. இதில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், சாய்ம் அயூப், ஆமர் ஜமால் ஆகிய முன்னணி வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 30-இல் இருந்து 38 ஆக உயர்த்தியுள்ளதுடன், 21 புதிய வீரர்களை இதில் சேர்த்துள்ளது. இந்த புதிய ஒப்பந்த காலம் 2026 நவம்பர் 1 முதல் 2027 ஜூன் 30 வரை அமுலில் இருக்கும். வீரர்கள் விளையாடும் போட்டி வடிவங்களின் அடிப்படையில் ஐந்து புதிய பிரிவுகளாக இந்த ஒப்பந்தங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மிக உயரிய ‘AB’ பிரிவில் பாபர் அசாம் , சல்மான் ஆகா ஆகிய இரு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். புதிய நடைமுறையின்படி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ‘AB’ பிரிவும், டெஸ்ட் போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களுக்கு ‘A’ பிரிவும், ஒருநாள் மற்றும் டி20 வீரர்களுக்கு ‘BC’ பிரிவும், டி20 சிறப்பு வீரர்களுக்கு ‘C’ பிரிவும் வழங்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ‘D’ பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது களத்திற்கு வெளியேயான செயல்பாடுகள் காரணமாக முகமது ரிஸ்வான் பாதியிலேயே நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் மீது பாகிஸ்தானின் தேசிய இணைய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் கேப்டன் ஷான் மசூத் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் மசூத் விடுவிக்கப்பட்டார். சாய்ம் அயூப் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க விரும்புவதாக பிசிபி-யிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

