Friday, May 8, 2026 4:34 pm
கடந்த சில மாதங்களாக நாட்டில் பதிவாகி வரும் சந்தேகத்திற்குரிய மரணங்கள் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் உயிரிழந்த கபில சந்திரசேன மற்றும் ரங்க ராஜபக்ஷ ஆகியோரின் மரணங்கள் தொடர்பில் பாரிய மர்மம் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை வழக்குகளில் தொடர்புபடுத்துமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கபில சந்திரசேனவுக்குக் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சந்திரசேன உயிருடன் இருந்தபோது, தன் மீது கட்டாயப்படுத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகக் கூறி சத்தியக்கடதாசி ஒன்றையும் வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டிய ரமேஷ் பத்திரண, இவ்வாறான மரணங்கள் திட்டமிட்ட கொலைகளா அல்லது தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான மனரீதியான சித்திரவதைகளா என்பது குறித்து சந்தேகம் எழுவதாகவும் கூறினார்.
மே தினக் கூட்டங்களின் போது ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்னரே அறிவிப்புகளை வெளியிடுவது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் செயலாகும் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அச்சுறுத்தல் அரசியலை விடுத்து, நீதித்துறை மற்றும் அரச சேவையைச் சுதந்திரமாக இயங்க அனுமதிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன், தமது கட்சி தற்போது நாடு தழுவிய ரீதியில் பலமான மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

