Friday, April 17, 2026 2:16 pm
தமிழ் நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைகளில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
முதல் முறையாக களம் காண உள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைகளாக இருக்கட்டும் விஜயின் மக்கள் சந்திப்பாக இருக்கட்டும் அனைத்தும் மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளது.
ஒரு சில கட்சிகளின் விமர்சனமாக ரசிகர்கள் எல்லாம் வாக்காக மாறாது என்ற கருத்து காணப்பட்டபோதிலும் விஜயின் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கட்டும் விஜயின் வீதியோர சந்திப்புக்களின் சரி மக்கள் அவரை வரவேற்கும் விதம், கொடுக்கும் ஆதரவு, குவிந்துள்ள மக்களின் படை என்பன ஏனைய கட்சிகளை சற்று கதிகலங்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.
70 வருட அரசியல், 50 வருட அரசியல் என அனுபவம் வாய்ந்த அரசியல் களத்துடன் மோதுவதற்கு புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்பாடுகளை அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
கரூர் கூட்ட நெருசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த விடயம், ஆரம்பத்தில் ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட சிக்கல் தற்போது சட்டவிரோதமாக இணையத்தளத்தில் வெளியான ஜனநாயகன் பட விவகாரம் மற்றும் விஜயின் விவாகரத்து விடயம் எனப் பல விடயங்கள் விஜயின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கும் என பேசப்பட்டாலும் இவையனைத்தையும் தாண்டி மக்கள் வெள்ளத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடைபோடுகின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பிரசாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்கும் போது அவர்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அந்தவகையில் இதுவரை விஜய் பிரச்சாரத்தை நடத்திய பகுதிகளில் வெளியிட்ட வாக்குறுதிகளாக சில வாக்குறுதிகள் காணப்படுகின்றன.
மதிப்புமிகு மகளிர் திட்டம் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபா உரிமைத் தொகை வழங்கப்படும்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
அண்ணன் சீர் திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும்.
வெற்றிப் பயணத் திட்டத்தின் படி தமிழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை வரவேற்பு கிட் வழங்கப்படும்.
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபா உதவித் தொனை மற்றும் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு 2000-2500 வரை உதவித்தொகை
12-ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு 20 லட்சம் வரை பிணையில்லா கல்வி கடன்
காமராஜர் கல்வி உறுதித் திட்டம் மூலம் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தாய் அல்லது காப்பாளர் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் 15000 ரூபா செலுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
இந்த வாக்குறுதிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இவை அன்றாட சூழலுடன் ஒத்துப்போகும் வாக்குறுதிகளாக பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறது.
கவர்ச்சிகர வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் வெளியிட்டுள்ளன. ஆனாலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். காரணம் அனுபவமற்ற கட்சி என பேசப்பட்ட கட்சி தற்போது மக்களின் பேராதரவோடு உருவெடுத்துள்ள நிலையில் முக்கியமான தேர்தல் அறிக்கையாக தமிழக வெற்றிக்கழகத்தின் அறிக்கை பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.
கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழ்நாட்டு மக்களுக்கான கழகத் தேர்தல் அறிக்கையைக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட 2026 தேர்தல் அறிக்கையில் சமூக நீதி, பெண்கள் நலன் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
கட்சியின் கொள்கை விளக்க மாநாட்டில் முன்வைக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பாக இல்லாமல் ஒரு மாற்றுக் கட்சி தமிழகத்தை எப்படிக் கொண்டு செல்லும் என்பதற்கான தொலைநோக்குப் பார்வையாகக் கருதப்படுகிறது.
முக்கிய நிர்வாகிகளுக்கு முன்னிலையில் வெளியிட்ட இந்த அறிக்கை தவெக-வின் தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

