Friday, April 17, 2026 1:58 pm
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் 12 ஓட்டங்கள் என்ற ஒரே மொத்த எண்ணிக்கையில் 2 விக்கெட்களை இழந்து மும்பை இண்டியன்ஸ் தடுமாறத் தொடங்கியது. ஆனாலும்கூட குவின்டன் டி கொக் குவித்த அபார சதமும், நாமன் திர் பெற்ற அரைச் சதமும் மும்பை இண்டியன்ஸை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அவர்கள் இருவரினால் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்கள் பகிரப்பட்டது. குவின்டன் டி கொக் 60 பந்துகளில் 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார். நாமன் திர் 31 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
பந்துவீச்சில் அசத்திய அர்ஷ்தீப் சிங் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
197 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
ப்ரியான்ஷ் ஆரியா 15 ஓட்டங்களையும், கூப்பர் கொன்னலி 17 ஓட்டங்களையும் பெற்று இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டம் இழந்தனர். ப்ரப்சிம்ரன் சிங், அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் 67 பந்துகளில் 139 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கிற்கு பெரிதும் வலுச்சேர்த்தனர்.
ஷ்ரேயஸ் ஐயர் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ப்ரப்சிம்ரன் சிங், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
ப்ரப்சிம்ரன் 39 பந்துகளில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 80 ஓட்டங்களுடனும், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் கஸன்ஃபார் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீசி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குவிண்டன் டி காக் ஐ.பி.எல். தொடர்களில் அதிகமுறை 50 இற்கும் அதிக ஓட்டங்களை அடித்த முழு நேர விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மறுப்பக்கம் குவிண்டன் டி காக் 25 முறை அரைசதம் கடந்துள்ளார். எம்.எஸ். தோனி 24 முறை அரைசதம் அடித்துள்ளார். இதுதவிர மூன்று வெவ்வேறு ஐ.பி.எல். அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை குவிண்டன் டி காக் பெற்றுள்ளார்.
நேற்றைய தோல்வியுடன் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்தது.
பல திறமையாக வீரர்கள் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி மட்டும் கடினமாக இருக்கிறது. இந்த ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலிருந்து நான்கு வீரர்கள் இப்போது மும்பை அணியில் இருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து தோற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.
ஐ.பி.எல். இந்த சீசனில் இதுவரை தோல்வியையே சந்தித்திடாத ஒரே அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிதான்.
தொடர் ஆரம்பிப்பதற்கு முன் கோப்பை வெல்ல வாய்ப்பிருக்கும் அணியாக கருதப்பட்ட மும்பை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் மிக மோசமாக ஆடிவருகிறது.
தனித்தனி மேட்ச் வின்னர்கள் ஏராளம் பேர் இருந்தாலும் அணியாக அவர்களால் ஒருங்கிணைந்து ஆட முடியவில்லை. அந்த ஒருங்கிணைப்பு நிகழ்ந்தால் மட்டுமே மும்பை அணியின் கோப்பைக் கனவு நனவாகும்.

