Sunday, October 11, 2026 7:02 am
வி.இ.குகநாதன்
‘கள்ளத்தோணி என்ற சொல்லாடல் மீண்டும் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்ததையிட்டு, நான் முன்னர் எழுதிய பதிவொன்றின் ஒரு பகுதியினைக் கீழே தருகின்றேன்.
கள்ளத்தோணி என்றால் என்ன என்பதனைப் பின்னர் பார்ப்போம். முதலில் பொதுவாக கள்ளத்தோணி என்பது இன்று சட்டத்திற்குப் புறம்பான படகுகள் (நுழைவு இசைவு visa இல்லாத படகுகள்) என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. இப் பொருளிலேயே முதலில் இச் சிக்கலைப் பார்ப்போம்.
விசா (நுழைவு இசைவு) நடைமுறை எல்லாம் இலங்கை ஒரு நாடாகிய (1948) பின்பே ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்னரேயே மலையகத் தமிழர்கள் உட்பட எல்லோரும் இலங்கையிலேயே வாழ்ந்து வந்ததனைக் குடித்தொகைக் கணக்கெடுப்புகள் (census) மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவே விசா நடைமுறைகள் இங்கு பொருந்தாது. வேண்டுமானால் முன்பே இங்கிருந்த மரபுரீதியான மக்களிடம் இசைவு இல்லாமல், புதிதாகப் படகுகளில் வந்தவர்களைக் ‘கள்ளத்தோணிகள்’ எனலாம் எனக் கொண்டால்,
முதல் கள்ளத்தோணிகள் சிங்களவரே என்பதற்குச் சான்றாக சிங்களவரின் தூய நூலான (Holy book) மகாவம்சமே காணப்படுகின்றது. மகாவம்சத்தின் படி, சிங்களவரின் மூதாதையரான விசயனும் அவனது தோழர்களும் இலங்கையிலிருந்த இயக்க-நாகர்களின் இசைவு இல்லாமலேயே இலங்கைக்கு வந்து, பின்னர் அவர்களையே அழித்திருந்தார்கள். (மகாவம்சத்தின் தொடக்க காலக்கதைகள் வெறும் புனைவுதான், ஆனால் முள்ளை முள்ளால் எடுக்கவே இந்தக் கூற்று). எனவே மகாவம்சத்தின்படி முதல் கள்ளத்தோணி விசயனின் படகு என்பதுடன் சிங்களவரே கள்ளத்தோணிகள் ஆவார்கள்.
கள்ளத்தோணி என்றால் என்ன?
உண்மையில் கள்ளத்தோணி என்பது சட்டத்திற்குப் புறம்பான படகு என்பதே தவறான பொருள்கோடலாகும்.
கள்ளத்தோணி என்பது ஒரு வகையான படகே ஆகும். தொடக்க காலத்தில் மரங்களை இணைத்துக் கட்டிய படகு செய்வதில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கினார்கள். இதனாலேயே கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல்லே பல மொழிகளிலும் அதனை ஒத்த சொற்களுக்கான மூலமாக அமைந்தது. (Catamaran-English, καταμαράν – Greek……) . இவ்வாறு கட்டுமரமாகத் தோன்றிய படகு கட்டும் தொழில் கடல் வணிகம் விரிவடையும் போது தோணிகளாக மாறியது. அத்தகைய தோணிகளில் ஒரு வகையே கள்ளத்தோணி ஆகும்.
கள்ளத்தோணி குறித்து வி.ஆர்.இராமச்சந்திர தீட்திதர் எழுதிய ‘Origin and Spread of the Tamils’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘கள்ளத்தோணியில் இரு முனைகளிலும் கண் உருவம் செதுக்கப்படுகின்றது. தாய்த்தெய்வ உருவமும், நற்பேற்றுக்காக, ‘உ’ என்ற குறியும், குதிரை வடிவமும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு தோணி வகையே கள்ளத்தோணி எனப்படும்.
கள்ளத்தோணியினை ஆங்கிலத்தில் ‘Clandestine boat’ எனலாம். பாய் மரத்தினால் காற்றின் துணையுடன் இத் தோணி செயற்படும். கடலாய்வாளர் ஒரிசா பாலு இத்தகைய கள்ளத்தோணி ஆமையின் வழித்தடங்களைப் பின்பற்றி நீரோட்டங்களில் மிதந்து செல்லும் நுட்பத்தினையும் பயன்படுத்தியதாகவும், அத்தகைய நுட்பத்தை சங்க காலத்தில் பயன்படுத்திய ஒரே இனம் தமிழர்களே எனவும் கூறுகின்றார். கள்ளத்தோணி என்ற சொல்லின் முன்னொட்டான ‘கள்ள’ என்பதற்கான பொருள் கூட யாருமறியாத நுட்பத்தினைப் பயன்படுத்தியமை ஒரு காரணமாகவிருக்கலாம் என நான் துணிகிறேன். Clandestine என்ற ஆங்கிலச் சொல்லும் Kept secret or done secretively என்ற பொருள் இருப்பதனையும் கவனத்திற்கொள்க.
கள்ளத்தோணி என்ற ஒரு வகையான தமிழர்களின் தனித்துவமான படகுவகை எப்போது சட்டத்திற்குப் புறம்பான படகு என்ற பொருளினைப் பெறுகின்றது எனப் பார்த்தால், அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயாகும். ஆங்கிலேயர்கள் தமது நீராவிப்படகு தவிர்ந்த ஏனைய படகுகளை அழிப்பதற்காகச் செய்த செயலே அதுவாகும். ஆங்கிலேயர்கள் உள்ளூர் படகு கட்டும் தொழிலினை நசுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக மறைந்த வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை, 1789 இல் இந்திய தொழில்நுட்பவியலாளர் கப்பற்தொழிலில் ஈடுபடத்தடை விதித்து அரசிதழ் (கசற்) வெளியிட்டமை போன்றவற்றைக் கூறலாம். இந்த வகையில் நசுக்கப்பட்டதே, தமிழர்களின் கள்ளத்தோணி வகையுமாகும். இதன்போதே கள்ளத்தோணிகள் போக்குவரத்துச் சட்டத்திற்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது (பொதுவான அறரீதியான சட்டத்திற்கு புறம்பாக தமிழர் நிலங்களைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், தமிழர்களின் தோணிகளை(Clandestine boats) கள்ளத்தோணிகள் (illegal boats) என மாற்றியமை வேடிக்கையானதே.
இதுவே கள்ளத்தோணியின் வரலாறாகும். கள்ளத்தோணி என்பது தமிழரின் பெருமைக்குரிய வரலாறேயாகும்.

