Thursday, May 21, 2026 11:12 am
வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை(20) உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த பெண், இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நபரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். எனினும், அந்தப் பெண்ணைக் கணவனின் தாயார் மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து, 25 பவுண் தங்க நகையையும், ஒரு வீட்டையும் வரதட்சணையாக வழங்குமாறு கோரி கணவனின் தாயார் அப்பெண்ணை நச்சரித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பம் என்பதால், அவர்களால் கோரப்பட்ட வரதட்சணையை வழங்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப கணவனின் தாயார் முயற்சித்த வேளையில், தனது கணவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என அப்பெண் கோரியுள்ளார். எனினும், “எனது தாயார் கேட்ட வரதட்சணையைத் தராவிட்டால் நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்” என அப்பெண்ணின் கணவரும் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளான அந்தப் பெண், நேற்று காலை தவறான முடிவெடுத்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

