Tuesday, April 21, 2026 5:55 pm
லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், ஊழியர்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தனியார் ஏஜென்சி மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், ஊழியர்களின் தோற்றம், ஒழுக்கம் சார்ந்த விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, ஆண் ஊழியர்கள் தாடி வைத்திருந்தாலோ அல்லது நீண்ட தலைமுடி வைத்திருந்தாலோ 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், பெண் ஊழியர்கள் தலைமுடியை முறையாக கொண்டை போடாமலோ அல்லது ஹேர்நெட் அணியாமலோ இருந்தால் அவர்களுக்கும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணியாத ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாயும், அடையாள அட்டை அணியாதவர்களுக்கு 100 ரூபாயும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியின் போது தூங்குவது, புகைப்பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 500 ரூபாய் அபராதத்துடன் பணிநீக்கம் மற்றும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்அறிவிப்பின்றி பணிக்கு வராமல் இருந்தால் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சுமார் 4,000 ஊழியர்களை பாதிக்கும் இந்த விதிகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், பிற அரசு மருத்துவமனைகளில் இல்லாத இத்தகைய விதிகளை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

