Wednesday, April 22, 2026 2:02 pm
2019ம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு ஆங்கில மொழி மூலமாக கல்வி கற்கும் வாய்ப்பு 7 வருடங்களாக மறுக்கப்பட்டு வருவதாக அச்சிறுவனின் பாதுகாவலரான சிறியதாய் கவலை தெரிவித்துள்ளார்.
ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக இன்னும் காத்திருக்கும் நிலை உண்டாகியுள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்ற போதே குறித்த சிறுவனின் விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில் அச்சிறுவனின் தங்கையும் அத்தாக்குதலில் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார். அவர்கள் இருவரையும் அவர்களது சிறியதாய் வளர்த்து வருகின்றார்.
தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தொடர்வதற்கு உரிய அதிகாரிகள் உதவி செய்யுமாறு குறித்த சிறுவனின் சியதாய் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 6 வரைக்கும் கல்வி கற்று வந்த நிலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்குரிய வசதிகள் குறித்த சர்வதேச பாடசாலையில் இன்மையால் அரச பாடசாலையை நாடவேண்டியிருந்தது.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதிகளையுடைய பாடசாலைகளில் அச்சிறுவனை இணைக்கும் முயற்சி 7 வருடங்களாக மேற்கொண்டும் அது இதுவரைவரையில் கைகூடவில்லை.
தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவனுக்கு பரீட்சையமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாசாலையில் இணைத்து கற்பித்து வருவதாகவும் இதனால் பெரும் சிரமத்தையும், செலவுகையும் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

