Wednesday, April 22, 2026 1:05 pm
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் சூடு பிடித்து காணப்பட்டது. அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகின்றது. தமிழகத்தில் மொத்தம் 5,7343,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,8030,658 ஆண் வாக்காளர்களும் 2,9304,905 பெண் வாக்காளர்களும் 7728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பதற்காக தேர்தல் தினமான நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர்.
நேற்று காலை முதல் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் வேளச்சேரி சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். நேற்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
வரலாற்று பின்னணி உடைய அரசியல் கட்சிகள், புதிய அரசியல் முயற்சியாக களம் இறங்கியுள்ள அரசியல் கட்சி, மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் என தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக கூட்டணியும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல் வெறும் ஆட்சிப் போட்டி மட்டுமல்ல தலைமுறைகள் மாறிய அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் தனித்துப் போட்டியிடுவது இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் பாரம்பரிய வாக்கு வங்கிகள் சிதையுமா? புதிய அரசியல் சக்திகள் எழுச்சி காணுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கருணாநிதி–ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ளது. இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களிலும் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
தமிழ்நாடு அரசியலில் முக்கியமான நாட்களாக 2026 ஏப்ரல் 23 மற்றும் மே 04 ஆகிய திகதிகள் கருதப்படுகின்றன. ஏனெனில் ஆட்சியை தக்க வைக்க முயலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஒருபுறம் இழந்த ஆட்சியை கைப்பற்ற விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி ஒருபுறம் என இரு பழம்பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் மோதுகின்றன.
நான்கு முனை போட்டி இந்த தேர்தலை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றி இருக்கிறது.
இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை உண்டாக்குமா என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது அதுவே முதன்முறை.
2016 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா அதே ஆண்டில் மரணமடைந்தார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்த பின்னர் முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது.
தற்போது புதிதாக கட்சி ஒன்றினைத் தொடங்கி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜய். விஜயின் தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் 233 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
கூட்டணிகளின் போர்கள், தனித்து நிற்கும் கட்சிகளின் சவால்கள், புதிய தலைமுறையின் அரசியல் ஆசைகள் இவை அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை சாதாரணமாக அல்லாது தீர்மானம் மிக்க தேர்தலாக மாற்றியுள்ளது.
மே 4 ஆம் திகதி வெளியாகப்போகும் முடிவுகள் வெறுமனே வெற்றியாளரை மட்டும் தெரிவு செய்யும் தேர்தலாக அல்லாது தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலப் பாதையையும் தீர்மானிக்கப்போகின்றன.
இளம் தலைமுறைகள் எதிர்பார்க்கும் மாற்றமா அல்லது ஆண்டாண்டு கால ஆட்சி தொடருமா என்ற இறுதி கேள்விக்கு நாளைய தேர்தலும் மக்களின் வாக்குகளுமே விடை காணப் போகின்றன.

