Thursday, July 2, 2026 5:47 am
வி.இ.குகநாதன்
‘கேப் வெர்டே’ வெறும் அரை மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட, வெவ்வேறு தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டின் மக்கள் தொகை என்பது யாழ் மாவட்டத்தின் மக்கள் தொகையினை விடக் குறைவானது. சென்னை நகரின் மக்கள் தொகையில் பதினான்கில் ஒரு பங்கு. நாட்டின் பொருளியலும் ஒன்றும் சிறப்பாகவில்லை. தனியாள் வருமானத்தில் தமிழ்நாட்டினை விடக் குறைந்த அளவிலேயே உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சிறிய நாடு எப்படி இத்தகைய அடைவினை அடைந்தது!

குழுநிலையில் மேனாள் உலகக் கிண்ண வாகையாளரும், இப்போதைய போட்டியின் வாகையாளராக வரக் கூடும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இசுபெயின் நாட்டுடன் முதல் சுற்றில் மோதிய போதும் சரி; இரண்டாவது சுற்றிலும் மற்றொரு மேனாள் உலகக்கிண்ண வாகையாளரான உருகுவேயுடன் மோதிய போதும் சரி; மூன்றாவது சுற்றில் மேனாள் ஆசியாவின் வாகையாளரான சவூதி அரேபியாவுடன் மோதிய போதும் சரி; இந்த அணி எந்தவொரு போட்டியிலுமே தோற்கவில்லை. யாவுமே சமநிலையில் முடிவடைந்தன. இப்போது அடுத்த நிலையான 32 அணிகள் மட்டுமே பங்கேற்கும் ஒழிப்புச்சுற்றுக்கு (நொக் அவுட் ) முன்னேறியுள்ளது. இதுவரையான வரலாற்றில் இவ்வளவு குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு ‘ஒழிப்புச்சுற்று (Knockout stage ) இற்கு முன்னேறியதேயில்லை.
எப்படி இந்த நாடு இதனை அடைந்தது? பல காரணங்களைச் சொல்லலாம் என்றாலும் முகன்மையானதாக, இந்த நாட்டின் புலம்பெயர் வலுமையினைச் சொல்லலாம். இந்த நாட்டின் பெயரில் பசுமை இருந்தாலும், நாடோ வறட்சி மிகுந்த தீவுகளைக் கொண்ட நாடு. { யாழ்பாணத்துக்கு அருகேயுள்ள தீவுப்பகுதியினை எண்ணிப் பார்க்குக- ஊர்காவல்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு, எழுவைதீவு, நயினாதீவு}. இதனால் பெருமளவு மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு (போர்த்துக்கல், ஒல்லாந்து ) இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் வேறு புலத்தில் வாழ்ந்தாலும் தாயகத்தினை மறக்காதவர்கள். இவர்கள் வலுமையே இந்த அணியின் முதுகெலும்பு என்றால் அது மிகையன்று. அணிக்காக விளையாடும் 26 பேரில் 14 பேர் வேறுபுலத்தில் பிறந்து வளர்ந்தவர்களே! அனைத்துலக உதைபந்து விதிகளின் படி, குறித்த வீரர் வேறு நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், அவரது மரபு வேறொரு நாட்டுடன் தொடர்புபட்டிருந்தால், அவர் தனது மரபு சார்ந்த நாட்டுக்காக ஆட முடியும்; அதாவது பெற்றோர்களோ அல்லது பாட்டன்-பாட்டிமாரோ பிறந்த நாட்டுக்காகக் கூட ஒருவர் ஆட முடியும். இந்த விதிதான் கேப் வெர்டே அணிக்குக் கை கொடுத்தது. வீரர்கள் மட்டுமல்லாமல் பயிற்றுனர்கள், வல்லுனர்கள் ஆகியோருடன் தேவையான வளங்களையும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பெற்றுக் கொண்டது. உள்நாட்டிலும் சிறந்ததொரு உதைபந்துப் பண்பாடு ஒன்று வளர்த்து எடுக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி, ஒற்றுமை என்பனவும் இணைந்து கொள்ள நடந்ததுதான் இந்தப் புதுமை. இதுதான் தீவுகளின் தொகுதியான கேப் வெர்டேயின் வெற்றிக் கதை.
குறிப்பு- தெற்காசியாவிலும் இத்தகைய வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடு உதைபந்தில் மிளிர்வதற்கான வாய்ப்புகள் முன்னர் இருந்த போதும்……….

