Monday, May 11, 2026 8:35 pm
பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே, பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், கணக்கில் காட்டப்படாத செல்வத்தைக் குவித்ததாகவும், ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் , அவரது மனைவி ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் . இந்த வழக்கு அவரது ஜனாதிபதி கனவுகளைச் சிக்கலாக்கக்கூடும்.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் மகளான டுடெர்டே , மார்கோஸின் கூட்டாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள பிரதிநிதிகள் சபையில், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.அவர் முன்னதாக மார்கோஸுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார், ஆனால் இப்போது அவர்கள் பரம எதிரிகள்.
அவருக்கு எதிரான புகார்கள் செனட் சபைக்கு அனுப்பப்படும், அங்கு அவர் விசாரணையை எதிர்கொள்வார். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், டுடெர்டே பொதுப் பதவிகளில் இருந்து தடை செய்யப்படுவார், இது 2028-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவரது திட்டத்தைத் தகர்த்துவிடும் .
அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளார். அவரது தரப்பு வழக்கறிஞர் ஓர் அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டம், சட்டம் மற்றும் சாட்சிய விதிகள் ஆகியவற்றின்படி, தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு இப்போது குற்றம் சாட்டுபவர்கள் மீது உள்ளது” என்று கூறியுள்ளார்.

