Monday, July 20, 2026 4:18 am
வி.இ.குகநாதன்
இன்று (யூலை 20) அனைத்துலக வல்லாட்ட நாள். செஸ் ஆட்டத்தினைத் தமிழில் சதுரங்கம் என்றே பலரும் அழைக்கின்றோம், ஆனால் உண்மையில் `சதுரங்கம்` என்பது தமிழ்ச்சொல்லன்று. அதே போன்று இந்த ஆட்டம் இந்திய நிலப்பரப்பில் தோன்றி, பாரசீகத்தினூடாக ஐரோப்பாவினை அடைந்தது என்பதும் எல்லோரும் அறிந்ததே! இந்தியாவில் எங்கு எப்போது தோன்றியது? குப்தப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் `சதுரங்கா` என்ற பெயரில் தோன்றியது என்பர். குப்தப்பேரரசு காலம் என்பது பொது ஆண்டு ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. அதேவேளை தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கீழடி, ஆதிச்ச நல்லூர், வெம்பக்கோட்டை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சங்ககாலத்தினைச் சேர்ந்த வல்லாட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வெளியிட்ட கீழடி -4 அகழாய்வு அறிக்கையில் `சதுரங்கக் காய்கள்` என்றே குறிப்பிடப்பட்டுப் படத்துடன் ஆட்டக்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சங்ககாலம் என்பது குப்தர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட காலப்பகுதியாகும். குப்தர் காலத்தில் செஸ் ஆட்டம் தொடங்கியது எனில் அதற்கு முற்பட்ட காலத்தினைச் சேர்ந்த `செஸ் காய்கள்`அகழாய்வில் கிடைப்பது எவ்வாறு? இங்குதான் ஒரு வரலாற்றினையே நாம் தொலைத்து விட்டோம். ஏன் தொலைத்தோம்? ஒரு சொல்லினைத் தொலைத்ததால் வரலாற்றினையும் சேர்த்தே தொலைத்து விட்டோம். அச் சொல்தான் `வல்லாட்டம்`.


`வல்` என்றால் நகர்த்து (move) என்றொரு பொருளுண்டு { `வலவன் ஏவா வானூர்தி` என்பது `நகர்த்துபவன் இல்லாத வானூர்தி` என்பதனை நோக்குக}. இந்த `வல்` என்ற முன்னொட்டானது `ஆட்டம்` ( Game ) என்ற பின்னொட்டுடன் சேர்ந்து வல்லாட்டம் என்ற சொல் பிறக்கும். வல்லுக்காய், வல்லுப்பலகை போன்ற சொற்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. வல்லுப்பலகையின் வடிவம், வல்லாட்டத்தின் இயல்பு, போர்க் குணம் போன்றவை சங்க இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளன.
{இவை பற்றி விரிவாக அறிந்து கொள்ள நூலகம் இணையத்தளத்திலுள்ள `வல்லாட்டம்` எனும் தலைப்பிலுள்ள பொத்தகம் காண்க, https://www.noolaham.org }

இவ்வாறு சங்ககாலம் முதல் `குற்றாலக் குறவஞ்சி` எனும் 17ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த நூல் வரைப் புழங்கி வந்த `வல்லாட்டம்` எனும் சொல்லினை மறந்து, `சதுரங்கம்` எனும் வடமொழிச் சொல்லினைப் பயன்படுத்தியதாலேயே நாம் எமது வரலாற்றினையும் மறந்து போனோம். `சதுரங்கம்` எனும் போதே அதனை வட இந்தியாவின் `சதுரங்கா` என்பதிலிருந்து வந்ததாகவே கருதுவர். எனவே இனிமேலாவது வல்லாட்டம் என்ற சொல்லினை மீளப் பயன்படுத்துவோம்.
இன்றைய அனைத்துலக வல்லாட்ட நாளில் தமிழராகிய நாங்கள் ஓர் உறுதி எடுப்போம், இனி `செஸ்` என்பதனைத் தமிழில் வல்லாட்டம் என்றே அழைப்போம்.
Chess = வல்லு
Chess game = வல்லாட்டம்
Chess board = வல்லுப்பலகை
Chess piece = வல்லுக்காய்
King = அரசன்
Queen = அரசி
Bishop = தேர்
Knight = குதிரை
Pawn = காலாள்
Rook = யானை
Classical chess = மரபு வல்லு
Rapid chess = விரைவு வல்லு
Blitz chess = மின் வல்லு
Bullet chess = நுணுத்த வல்லு
Freestyle Chess = கட்டறு வல்லு
Check = எழுதருகை
Checkmate = முற்றுகை
Stalemate = இக்கட்டு.

