Monday, November 23, 2026 7:41 pm
கைப்பந்து விளையாட்டு தற்போது 1.2 பில்லியன் மக்களைச் சென்றடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இது உலகின் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டாக மாறியுள்ளதாகவும் சர்வதேச கைப்பந்து கூட்டமைப்பு (FIVB) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தெரிவித்துள்ளது.
உலகளாவிய பார்வையாளர் அளவீடு , பகுப்பாய்வு நிறுவனமான ‘நீல்சன்’ (Nielsen) மேற்கொண்ட புதிய ஆய்வை மேற்கோள் காட்டியுள்ள சர்வதேச கைப்பந்து கூட்டமைப்பு , தனது ‘மூலோபாய தொலைநோக்கு பார்வை 2032’ (Strategic Vision 2032) திட்டத்தின் கீழ், 2032-ஆம் ஆண்டிற்குள் 1.6 பில்லியன் மக்களை இந்த விளையாட்டோடு இணைக்க இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டொமினிகன் குடியரசின் புண்டா கானாவில் நடைபெற்ற 40-வது சர்வதேச கைப்பந்து கூட்டமைப்பு உலக மாநாட்டில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து ஆகிய இரண்டும் இணைந்து, கூடைப்பந்து விளையாட்டுடன் சமமாக, உதைபந்தாட்டத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டாகத் திகழ்கின்றன.
நீல்சன் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு ஆய்வில், 21 முக்கிய சந்தைகளில் 800 மில்லியன் மக்கள் கைப்பந்து விளையாட்டோடு தொடர்புடையவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது; அதே சந்தைகளில் தற்போதைய எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டியுள்ளது. சமீபத்திய ஆய்வில், ஆய்வு செய்யப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 42-ஆக அதிகரிக்கப்பட்டதன் மூலம், ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது.

