Sunday, May 10, 2026 5:55 pm
நேரு உள் விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற விஜய் பதவி ஏற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு விழாக்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான மரபு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
ஆனால், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் மரபைப் பின்பற்றாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முதல் நாளிலேயே விஜய் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் முதலமைச்சர் , அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். “வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

