Sunday, May 31, 2026 12:13 pm
திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் தனது பதவியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய விவாதத்தையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளன.
நீண்ட காலமாக திமுகவின் தூணாக விளங்கி வரும் துரைமுருகன் அவர்களுக்கு தற்பொழுது வயது மூப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நல குறைவுகள் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளன. கட்சிப் பணிகளையும், தீவிரமான அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்து செல்வதில் இந்த வயது முதிர்வு தடையாக இருப்பதால், அவர் இந்த அதிரடி முடிவை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. தங்களுக்கு பின் அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு பொதுச்செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வழங்குவது கட்சிக்கு நல்லது என்று அவர் கருதுவதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், திமுகவின் உட்கட்சி தேர்தல்கள் மற்றும் அடுத்தகட்ட மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் தற்பொழுது தீவிரமடைந்துள்ளன. கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் இதுகுறித்து அவர் ஆலோசித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ஒரு மூத்த தலைவர் பதவியிலிருந்து விலக முற்படுவது திமுகவினர் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

