Tuesday, September 15, 2026 8:53 pm
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சட்டசபை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் விஜய் ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் கோபப்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் சட்டசபை போல ஒரு செட்டப் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அந்த டாஸ்க் தொடர்பாக பேசிய விஜய் சேதுபதி ‘வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பொறுப்பும் பிரச்சனையும் வரும்போது எதிர் அணியின் மீது குற்றம் சுமத்தி விட்டு ஓடி விடுவது ஒரு தலைமை பண்புக்கான தகுதி இல்லை. அது ஏமாத்துற வேலை’ என்று கூறியிருந்தார்.
எனவே, விஜய் சேதுபதி தமிழக முதல்வர் விஜயைத்தான் விமர்சிக்கிறார் என தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய் சேதுபத்யை விஜயின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் திட்டி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பானது மட்டுமே என விஜய் டிவியும் கூறியிருந்தது.
இந்நிலையில்தான் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். ‘விஜய் சேதுபதியின் பொதுவான கருத்துக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக தாங்களாகவே பொருள் கற்பிப்பதா தம்பி விஜய் சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியும் சுட்டிக் காட்டவில்லை. விஜய் சேதுபதியை தவெகவினர் கடுமையாக விமர்சித்து, அவரை இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது’ என அவர் தெரிவித்திருக்கிறார்.

