Monday, September 14, 2026 12:47 pm
தோமஸ் கிறிஸ்டியன்சென்னின் ஒப்பந்தத்தை நீடித்தது பனாமா
பனாமாவின் உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக தோமஸ் கிறிஸ்டியன்சென் தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார். 2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிவரை நீடிக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று பனாமா கால்பந்து கூட்டமைப்பு செவ்வாயன்று தெரிவித்தது.
அமெரிக்கா, மெக்சிகோ , கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய பனாமா குழுநிலைப் போட்டிகளிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, 53 வயதான இவரது முந்தைய ஒப்பந்தம் ஜூன் மாதம் காலாவதியானது.
“ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்குத் தொடர்ச்சியை வழங்குவதும், CONCACAF-இல் பனாமாவை முன்னணி தேசிய அணிகளில் ஒன்றாகத் தக்கவைக்கும் நோக்கில் புதிய தலைமுறை வீரர்களைத் தயார்படுத்துவதும் கிறிஸ்டியன்செனின் தற்போதைய பணியாகும்,” என்று கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஸ்பெயின் சர்வதேச முன்கள வீரரான இவர், ஆர்ஜென்ரீனா நாட்டவரான அமெரிக்கோ காலேகோவிற்குப் பதிலாக ஜூலை 2020-இல் நியமிக்கப்பட்டார்.
டென்மார்க்கில் பிறந்த இந்தப் பயிற்சியாளர், இதற்கு முன்பு லீட்ஸ் யுனைடெட் ,பெல்ஜியத்தின் யூனியன் எஸ்ஜி உள்ளிட்ட பிற கிளப்புகளுடன் பணியாற்ரியுள்ளார்.

