Sunday, August 23, 2026 3:35 pm
சோமாலியாவின் புண்ட்லாண்ட் கடற்கரை பகுதிக்கு அருகில், கமரூன் கொடியை கொண்ட ஒரு சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கடத்தியுள்ளனர். இந்த கப்பலில் துருக்கி நாட்டு ராணுவ பயிற்சி மையத்திற்கு தேவையான ஆயுதங்கள், தொலைத்தொடர்பு ,செயற்கைக்கோள் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
M/V LUTUF என்ற இந்த வணிக கப்பல், கடந்த திங்கட்கிழமையன்று எய்ல் மாவட்டத்தில் உள்ள மாரையா நகருக்கு அருகே சுமார் மூன்றரை கடல் மைல் தொலைவில் கைப்பற்றப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட எட்டு கடற்கொள்ளையர்கள், முன்னர் ஏப்ரல் 26 அன்று மற்றொரு கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிற து.
கடத்தப்பட்ட இந்த 10 பேர் கொண்ட குழுவில் 6 இந்திய மாலுமிகள், ஒரு துருக்கி நாட்டவர், ஒரு ஜோர்ஜிய நாட்டவர், இரண்டு செர்பிய பாதுகாப்பு காவலர்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இந்திய மற்றும் துருக்கி நாடுகளின் அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், துருக்கி நாட்டின் இரண்டு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் மற்றும் பணியாளர்களின் தற்போதைய நிலை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
Edited by Siva

