Tuesday, August 4, 2026 12:35 pm
சென்னையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யாதே கைது செய்யாதே என்று அவர்கள் கோஷமிட்டனர். அதேபோல் லோக்சபாவிலும் திமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தவறியதாக கூறி நேற்று திமுக சார்பில் தஞ்சாவூரில் ஆளும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
பெண்களை இழிவு படுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தஞ்சாவூர் கிழக்கு பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பொலிஸார் மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இன்று சென்னை நீலாங்கரை இல்லத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில் தான் உதயநிதியின் கைது நடவடிக்கை டெல்லி வரை எதிரொலித்தது. டெல்லியில் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்று வருகின்றனர். உதயநிதி கைதான தகவல் அறிந்தவுடன் திமுகவின் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு கைது செய்யாதே கைது செய்யாதே என்று கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதன்பிறகு லோக்சபாவிற்குள் திமுக எம்பிக்கள் சென்றனர். அங்கும் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து நாடாளுமன்ற லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

