Saturday, September 12, 2026 7:25 pm
வி.இ.குகநாதன்
இதுவரையான அகழ்வாய்வுச் சான்றுகளின் படி உலகிலேயே பழமையான இலவங்கம் (கிராம்பு – Clove ) ஈழத்தின் துறைமுக நகரான மாதோட்டப் பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டதாக, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் எலினோர் கிங்வெல் பான்காம் (Dr.Eleanor Kingwell-Banham, University College London (UCL) அவர்கள் தெரிவித்துள்ளார். பொது ஆண்டு 900-1100 இற்கு இடைப்பட்ட காலத்தினைச் சேர்ந்த இலவங்கமே மாதோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரான காலப்பகுதியிலேயே இலவங்கமானது, இந்தோனிசியாவிலிருந்து ஈழத்துக்கு வந்து, ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கும் சென்றிருந்தது.
சிலப்பதிகாரத்திலேயே இலவங்கம் பற்றிய குறிப்புள்ளது.
‘தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம்……’ – சிலப்பதிகாரம்
மேலுள்ள பாடலுக்கு விளக்கம் கொடுத்த, மயிலை சீனி.வேங்கடசாமி என்ற அறிஞர், இலங்கைத் துறைமுகங்கள் மூலமாகவே ‘சாவகம்’ போன்ற நாடுகளுடன் தமிழ்நாடு வணிகம் செய்த்தாகச் சொல்லியிருப்பார். இவற்றினை எல்லாம் மெய்ப்பிப்பதாகவே Antiquity இதழின் 2018 ஆய்வுக் கட்டுரை அமைகின்றது. மேலும் இந்தாய்வானது மாதோட்டம் (மாந்தை எனவும் அழைப்பர்) துறைமுக நகரானது பன்னாட்டு வணிக நடுவகமாகவும் செயற்பட்டதாகவும் சான்றுகளுடன் கூறுகின்றது.
குறிப்பு – இலவங்கம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிடப்படுவதால், அதற்கு முந்திய காலப்பகுதியிலேயே (பொது ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியிலேயே) ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்ட போதிலும், அறிவியல் முறையில் சான்றுப்படுத்தப்பட்ட தொல்லியல் சான்றான, காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட இலவங்கத்தின் காலம் பொது ஆண்டு 900-1100 இற்கு இடைப்பட்ட காலத்திலேயே கிடைக்கின்றது. இதுவே உலகின் பழமையான இலவங்கத்தின் எச்சமாகும். இந்த எச்சம் மாதோட்டத்திலேயே கிடைத்தது.

