Saturday, September 12, 2026 8:08 pm
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான், உலக நாடுகளின் அமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் இணைய கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தது. உலக வங்கி , சர்வதேச நாணய நிதியத்தின் மீதான தங்களது பொருளாதார சார்பை குறைத்து, நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் பாகிஸ்தான் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
இதற்காக பிரிக்ஸ் அமைப்பின் ‘நியூ டெவலப்மென்ட் பேங்க்’ வங்கியில் 580 மில்லியன் டொலர் முதலீட்டையும் பாகிஸ்தான் வாங்கியுள்ளது. ஆனால், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஒருமித்த கருத்து மற்றும் அனைத்து நாடுகளின் ஒப்புதல் என்ற விதியின்படி, இந்தியாவின் கடுமையான எதிர்ப்பும் வீட்டோ அதிகாரமும் காரணமாக பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது.
பிறேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா , தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட இந்த அமைப்பில் கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் , ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டன.
தற்போது உலக மக்கள் தொகையில் 49 சதவீதத்தையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள இந்த அமைப்பில் இணைய பாகிஸ்தானை போல மேலும் 29 நாடுகளும் விண்ணப்பித்துள்ளன. இருப்பினும், இந்தியாவின் உறுதியான எதிர்ப்பால் பாகிஸ்தானின் பிரிக்ஸ் கனவு தற்போது நிறைவேறாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

