Tuesday, June 16, 2026 9:59 am
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கான உயர் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) உத்தியோகபூர்வமாக வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு , எமது சமூகத்தில் பெண்களினதும் சிறுமிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
2017 செப்டம்பர் 27 , அப்போதைய சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் குமாரரட்ணம் அவர்களின் நெறிப்படுத்தலில் , மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உள்ளடங்கிய தீர்ப்பாயத்தினால் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். எனினும் , உச்சநீதிமன்றத்தில் அரசாங்கத் தரப்பில் ஆஜரான மேலதிக பிரதி மன்றாடியார் நாயகம் அசாட் நவாவி , மேல்நீதிமன்றின் தீர்ப்பு முற்றிலும் சரியானது மற்றும் சட்டப்பூர்வமானது என்பதை வலுவான வாதங்கள் மூலம் நிரூபித்தார்.
இதனை முழுமையாக ஏற்றுக்கொண்ட பிரதம நீதியரசர் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் , ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட 4 முக்கிய குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை கடந்த மே மாதம் 6 ஆம் திகதி உறுதி செய்து தீர்ப்பளித்தது. இருந்தும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் இருவர் விடுவிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பை குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டுவதற்காக , கடந்த மாதம் 25 அன்று வழக்கு திகதியிடப்பட்டிருந்தபோதும் , மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னதாகவே சிறைச்சாலைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் ஏனைய குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் நிகழ்நிலை ஊடாக மற்றும் நேரடியாக முற்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சதீஷ்கரன் அவர்கள் , உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை பகிரங்கமாக வாசித்து , குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மீண்டும் ஒருமுறை மிக அழுத்தமாக உறுதி செய்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வாசிப்பின் போது வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டவாதிகளான கா. நசிகேதன் மற்றும் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் மன்றில் பிரசன்னம் ஆகி இருந்தனர்.
விடுவிக்கப்பட்ட 4 ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரகுபதி அவர்கள் பிரசன்னமாகி இருந்தார். வித்யா படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பானது , சட்டத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

