Thursday, November 26, 2026 6:26 pm
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறக்கும் காலகட்டம் தாய் ,சேய்க்கு மிகவும் முக்கியமானது என்பதால், தாய்க்கு உடல் ,மனரீதியான ஆதரவு வழங்கவும், குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் இந்த விடுப்பு பெரிதும் உதவும் என அரசு குறிப்பிட்டுள்ளது. குடும்ப பொறுப்புகளை கணவனும் மனைவியும் சமமாக பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் தங்களது மனைவியின் பிரசவ காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

