Tuesday, June 16, 2026 2:44 pm
நாடுகளுக்கிடையில் ஏற்படும் யுத்தநிலமைகள் பொதுவாக அந்தந்த நாடுகளை மட்டுமே பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலையில் ஈரான், அமெரிக்காவிற்கிடையிலான போர்மேகம் முழு உலகையும் மூடியிருந்தது. இந்த யுத்தத்தினால் உலக பொருளாதாரத்தில் ஸ்தம்பிதம் உண்டாகி பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன.
பல்வேறு இழுபறி நிலைமைகளுக்கு மத்தியில் அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான தமது இணக்கப்பாடுகளை வௌியிட்டுள்ளனர். இரு தரப்பினரும் மற்றும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதும் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டதும் நீக்கப்படும் என கூறுகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகப் பொருளாதாரத்திற்கு பெருமளவான பாதிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்க முற்றுகை நீக்கப்படுவது ஈரானின் சரிந்து வரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போரானது விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியது. அதன்பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு இடையே அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் களம் இறங்கின. முதலில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகும். பின்னர் இறுதி ஒப்பந்தம் குறித்து இரு தரப்பும் 60 நாட்களுக்குள் விவாதித்து முடிவெடுக்கும்.
ஈரானின் அணுஆயுதத் தயாரிப்பு பற்றி இரு தரப்பும் 60 நாட்களுக்குள் விவாதிக்கும். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது ஆகியவை இந்த வரைவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாக திறக்கும். ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா வாபஸ் பெறும். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் வரை அமெரிக்கா, ஈரான் மீது புதிய தடைகளை விதிக்காது. வொஷிங்டன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தும். இதன்மூலம் ஈரான் எண்ணெய்யை விற்கவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தவும் முடியும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது. இந்தச் செய்தியால் எண்ணெய் விலைகள் சரிந்தன. திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 4% சரிந்தன. அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 4.6% க்கும் அதிகமாக சரிந்தது. மேலும் ஆசியாவில் பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதோடு அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பங்கேற்காத நிலையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்துமாஎன்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த உடன்படிக்கை மின்னணு முறையில் கையெழுத்தாகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானிடையே நடைபெற்ற யுத்தத்தை வெறுமனே இரு நாட்டு மோதல் எனக்கூறிவிட முடியாது. ஹொர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் ஏதோவொரு வகையில் நெருக்கடியை சந்தித்ததுடன் இது உலக பொருளாதாரத்தில் தளம்பல் நிலையை உண்டாக்கியது.
உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 19ம் திகதி ஜெனிவாவில் கையெழுத்தாகப்போகும் அமெரிக்க ஈரானிடையேயான போர்நிறுத்தம் உலக அளவில் ஒரு ஸ்திரமான நிலையை உருவாக்கும் என்பதுடன் உலக அமைதிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பொருளாதாரம் சரி செய்யப்படுவதுடன் உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள் விலை உயர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு பலவாறான மாற்றங்கள் நிகழும் என்பதில் ஐயமில்லை.
ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககெதன்றாகும்.

