Tuesday, July 21, 2026 10:48 am
செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக புதிதாக எட்டு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை முன்னரே அடையாளம் காணப்பட்ட என்புகூட்டு தொகுதிகளில் ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (20) நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதுவரை மொத்தமாக 454 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் 440 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

