Tuesday, July 21, 2026 12:15 pm
நுவரெலியாவில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நேற்று திங்கட்கிழமை (20) மாலை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே நானுஓயா , மார்காஸ்தோட்ட , பொரலாந்த போன்ற பகுதிகளுக்கு இயங்கும் பேருந்துக்கள் சோதனை செய்யப்பட்டது இதில் மூன்று பேருந்துக்கள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு பேருந்துகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பகுப்பாய்விற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் அதிக நச்சுப் புகை மற்றும் அடர்ந்த கரும்புகை வெளியிடுகின்றன இது மனித உடலுக்கும், காற்று மாசுபடுவதோடு விரைவில் இயந்திரத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டு பழுதடைகிறது, அத்துடன் எரிபொருள் உட்செலுத்திகள் பழுதுபடல், பிஸ்டன் தேய்மானம் என்பன வாகனத்தில் ஏற்படுகிறது எனவும் வாகன உற்பத்தியாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் தவிர்ந்த, வேறு எரிபொருட்களைப் பயன்படுத்துவதோ அல்லது அவற்றை எரிகலவையாக்கி வாகனங்களை இயக்குவதோ முற்றிலும் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது உடனடியாகத் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதுடன், விபத்துக்கள் ஏதும் நேராத சந்தர்ப்பங்களிலும் கூட திடீரெனத் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யில் இயங்கும் பேருந்துக்களை கண்டறியும் நோக்கில் தொடர்ந்தும் நுவரெலியாவில் அடிக்கடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

