Monday, September 28, 2026 8:31 pm
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பொதுச் செயலாளராகத் தன்னை அங்கீகரிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விடுத்த கோரிக்கையை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (28) நிராகரித்தது.
கட்சிப் பொதுச் செயலாளராகத் தன்னை அங்கீகரிக்கும் உத்தரவு ஒன்றைப் பெறுவதற்கும், துமிந்த திஸாநாயக்க பொதுச் செயலாளராகச் செயல்படுவதையும் நிமல் சிறிபால டி சில்வா கட்சித் தலைவராகச் செயல்படுவதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பெறுவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக இந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அந்தத் தீர்ப்பை மாற்றி, தான் கோரிய நிவாரணத்தை வழங்குமாறு கோரி ஜயசேகர பின்னர் மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இன்று இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிமல் சிறிபால டி சில்வா தலைவராகவும் துமிந்த திஸாநாயக்க பொதுச் செயலாளராகவும் செயல்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவுக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை 2027ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும்
நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இதனைத் தெரிவித்துள்ளது.

