Tuesday, July 28, 2026 1:59 pm
நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நேர்மை கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் நடை பவனி இடம் பெற்றது.
மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமான குறித்த நடைபவனி பிரதான பாதையூடாக மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்து மன்னார் நகர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
குறித்த நடை பவனியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பணியாளர்கள், பிரதேச செயலக பணியாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார், ராணுவம், சுகாதார துறையினர், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த பேரணியில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.
அரச சேவையில் நேர்மை பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை யை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நேர்மை வாரம் நேற்று திங்கட்கிழமை (27) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் குறித்த நடை பவனி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

