Tuesday, May 12, 2026 10:52 am
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தமது நிரபராதித்தன்மையை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை என்றும் , அதனால் விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கழைமை (11) நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சமூகமளிப்பாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , எப்போது வரச் சொன்னாலும் தாம் வருவதற்குத் தயாராக இருப்பதாகவும் , அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்தோ அல்லது அழுத்தங்களைப் பிரயோகித்தோ இந்தப் பயணத்தை முன்னெடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
விசாரணைகள் இடம்பெறுவதை தாம் வரவேற்பதாகத் தெரிவித்த அவர் , ஆனால் அந்த விசாரணைகள் அழுத்தங்களுக்கு உட்பட்டதாகவோ அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் நோங்கிலோ அமையக் கூடாது என வலியுறுத்தினார்.
அவ்வாறு நீதிக்குப் புறம்பாகச் செயற்படுவதால் இறுதியில் நாட்டு மக்களே நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் , மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம் பல முக்கிய விடயங்களை மூடிமறைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குறிப்பாக நிதி அமைச்சில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் 80 கோடி ரூபாய் மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மரணத்தை உடனடியாகத் தற்கொலை எனக்கூறி மூடிமறைக்க முயன்றதைச் சுட்டிக்காட்டினார்.
தற்போது ஒரு விடயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சமூகத்தில் பெரும் பேசுபொருளை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர் , எதுவாக இருந்தாலும் சகல விடயங்கள் குறித்தும் முறையான மற்றும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தாம் எதற்கும் பயந்து விசாரணைகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் , ஆனால் தற்போதைய அரசாங்கம் பல பொறுப்புகளில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நழுவிச் செல்லவே முயற்சிப்பதாகவும் , அவ்வாறு நழுவிச் செல்வதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

