Thursday, May 14, 2026 3:43 pm
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள் முன்வர வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்த தாயகச் செயலணி மேலும் கூறுகையில்,
ஈழத்தமிழினத்தின் இனப்படுகொலை நாளாகிய மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை கடைப்பிடிக்கும் முகமாக எமது மக்கள் இறுதி யுத்த களத்தில் தங்களை பட்டினிச் சாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அருந்திய உப்பில்லாக் கஞ்சியினை நினைவூட்டும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் 12.05.2026 ஆம் திகதி தொடக்கம் 18.05.2026ம் திகதி வரை தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மே 18ஆம் திகதி வரை குறித்த நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இக்காலப்பகுதியில் எமது தாயக மக்களும் உணர்வு பூர்வமாகக் கலந்து எமது இனம் எதிர்நோக்கிய பட்டினிப்போரின் துயரங்களில் பங்கெடுப்பதுடன், சிங்கள அரசு திட்டமிட்டு நடத்திய அந்தப் பட்டினிப் போரின் வலிகளை தற்கால இளையோருக்கு உணர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு.
இக் காலப்பகுதிகளில் எமது மக்கள் தங்கள் பிரதேசங்களில் கலியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன் விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்வுகளையும் முழுமையாகத் தவிர்த்து பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்புகள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் எமது மக்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு எம் உறவுகள் பட்ட துயரில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

